டி.வி. நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய் தந்த அழுத்தம் காரணமா? டி.வி. நிகழ்ச்சி இயக்குனரிடமும் விசாரணை

பிரபல டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கு விசாரணையில், அவரது கணவர் மற்றும் தாய் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Update: 2020-12-11 23:00 GMT
பூந்தமல்லி,

பிரபல டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ந் தேதி தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்த நிலையில், அவரது கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 3-வது நாளான நேற்று காலை மீண்டும் வழக்கம்போல் அவர் போலீஸ் நிலையம் வரவழைக்கப்பட்டு, அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் காணப்படாத நிலையில், சித்ராவுக்கு அவரது கணவரும், தாயாரும் தந்த அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது முதலே இருவருக்கும் சற்று மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், சித்ராவின் நடவடிக்கையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஓட்டலில் சித்ராவுடன் அவர் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தனியார் டி.வி. படப்பிடிப்பு தளத்தில் ஹேம்நாத் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. ஹேம்நாத் நடவடிக்கைகள் குறித்து சக நடிகைகள் மற்றும் நண்பர்கள் சித்ராவிடம் புகார் கூறியதாகவும், இதனால் கடந்த சில மாதங்களாகவே சித்ரா மனகுழப்பத்தில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

அதைத் தொடர்ந்து ஹேம்நாத்தை விட்டு விலகி வரும்படி அவரது தாய் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கணவன் மற்றும் தாய் என இருபக்கமும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியானது. ஒருபுறம் தொடர்ந்து படப்பிடிப்பு இருந்து வந்ததாலும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

சித்ரா இறந்த பின்னர், அவரிடம் இருந்த 3-க்கும் மேற்பட்ட செல்போன்களும், கணவர் ஹேம்நாத்தின் செல்போனும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அவர்களுக்குள் எந்த மாதிரியான குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது என்று போலீசார் ஆய்வு செய்து உள்ளனர். இதில் சில குருஞ்செய்திகள் அழிக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

விசாரணையை முடுக்கிவிடும் நோக்கில், ஹேம்நாத் அளிக்கும் முரண்பட்ட தகவலால் நேற்று அம்பத்தூர் துணை கமிஷனர் தீபா சத்யன் நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு வந்து அவரிடம் தனி அறையில் தீவிரமாக விசாரணை நடத்தினார். ஆர்.டி.ஓ. விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், இந்த வழக்கில் மிகவும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சித்ராவின் இறப்பு தற்கொலை தான் என உறுதியானாலும், அவரது கணவரிடம் நடத்தப்பட்டு வரும் தொடர் வழக்கு விசாரணையில், தெளிவு கிடைக்கும் பட்சத்தில் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இவை அனைத்தும் ஆர்.டி.ஓ. விசாரணை தொடங்கப்பட்டு முழுமை அடைந்த பின்னரே இறுதி செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர் கடைசியாக கலந்துகொண்ட படப்பிடிப்பில் பனிபுரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர் என 5 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அதில் படப்பிடிப்பு தளத்தில் எப்படி இருந்தார்? என்ன மன நிலையுடன் காணப்பட்டார்? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு சித்ரா நல்ல மன நிலையுடன் எப்போதும் போல் இருந்ததாக விசாரணையில் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நிறைவு செய்து அனுப்பி வைத்தனர். மேலும் ஹேம்நாத்தின் தந்தையும் சித்ராவின் மாமனாருமான ரவிச்சந்திரனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்து வாக்குமூலம் பெற்று வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்