ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்குவது குறித்து ஆய்வு

ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் 4½ மணிநேரம் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தினார்கள்.

Update: 2020-12-11 22:15 GMT
சென்னை, 

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மறைந்த முதல்-அமைச்சருமான ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் சுமார் 40 ஆண்டுகளாக வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா நிலையம் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்துவதற்கு தமிழ் வளர்ச்சித்துறை கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி நிர்வாக ஒப்புதல் வழங்கியது. அந்த நிலம், இல்லத்தை கையகப்படுத்துவதற்கான பூர்வாங்க அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் 6-ந்தேதி உறுதி ஆவணமும் வெளியிடப்பட்டது.

மேலும் வேதா நிலையம் இல்லத்தில் இருக்கும் அசையும், அசையா சொத்துகளை பராமரிப்பு செய்வதற்காக அரசுக்கு மாற்ற முடிவு செய்து, அதற்காக டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளையும் அமைக்க தமிழக கவர்னர் அவசர சட்டமும் பிறப்பித்தார்.

இதன் தலைவராக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சர், விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் ஜெயலலிதா வீடு அரசுடமை ஆக்கப்பட்டது.

வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குவது தொடர்பாக அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்துக்கு சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி நேற்று காலை 10.45 மணியளவில் வருகை தந்தார். அவருடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரும் வந்தனர்.

காலை 10.45 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு மாலை 3.20 மணி வரை நடந்தது. சுமார் 4½ மணிநேரம் அதிகாரிகள் வேதா நிலையம் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது வேதா நிலையம் இல்லத்தின் வெளிப்புறத்தில் உள்ள திறந்த வெளி பகுதிகளில் எந்த மாதிரியான கட்டிடங்கள் அமைக்கலாம்?, நினைவு இல்லத்தை பார்வையிட பொதுமக்கள் வரும்போது எந்த வழியாக உள்ளே வர அனுமதிக்க வேண்டும்? எந்த வழியாக அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும்? என்பது உள்பட பல்வேறு ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்