அரியலூரில் இரும்பு கம்பியால் தாக்கி வியாபாரி கொலை; தம்பதி-மகனுக்கு வலைவீச்சு
அரியலூரில் இரும்பு கம்பியால் தாக்கி வியாபாரி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பதி மற்றும் அவர்களுடைய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கம்பியால் தாக்கினார்
அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 58). வியாபாரி. இவர் வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர் ராஜா(49). டிரைவர். பெரியசாமி வளர்த்த நாய் தினமும் ராஜா வீட்டிற்கு சென்று, அசிங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 வீட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை பெரியசாமி வளர்த்த நாய், ராஜா வீட்டில் அசிங்கப்படுத்தியதால், அதைப் பார்த்த ராஜா நாயை அடித்துள்ளார். அதைத் தடுக்க வந்த பெரியசாமிக்கும், ராஜாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜா, பெரியசாமியை இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
சாவு
இதையடுத்து பெரியசாமியை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி இறந்தார். இது குறித்து அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் கொலை வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராஜா, அவரது மனைவி மீனா, மகன் மணிகண்டன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.