சாலைகளை சீரமைக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் - மரப்பாலம் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல்
பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி மரப்பாலத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான பாஸ்கர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த வாரம் புயலால் பலத்த மழை பெய்ததையடுத்து நகரம் முழுவதும் சாலைகள் பலத்த சேதமடைந்து கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் புழுதிப்புயலை கிளப்பிக் கொண்டு வாகனங்கள் செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
அதிலும் முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட கடலூர் சாலை, 100 அடி ரோடு பகுதி கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மழையால் சேதமடைந்த சாலைகளில் புதிதாக கொட்டப்பட்டு இருப்பது போல் ஜல்லிக் கற்கள் பரவிக் கிடக்கின்றன. அவற்றின் மீது செல்லும் போது இருசக்கர வாகனங்கள் சறுக்கியபடி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
இதுமட்டுமின்றி கனரக வாகனங்கள் செல்வதால் அந்த கற்கள் உடைந்து நொறுங்கி எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புழுதியாக பறப்பதால் பகலிலும் இருசக்கர வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி செல்கிறார்கள். நாள்தோறும் ஜல்லிக்கற்கள் அப்புறப்படுத்தப்பட்ட போதிலும் அவை வெளியே கிளம்புவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள், சாலையோரங்களில் உள்ள வீடுகள், கடைகளில் புழுதிப் படலம் படர்ந்துள்ளது. எப்போதும் புழுதியாக காணப்படுவதால் வயதானவர்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சாலைகளும் விபத்து அபாயத்தை குறிக்கும் வகையில் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. மழை விட்ட போதிலும் பல இடங்களில் சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாமல் இருந்து வருகிறது.
இதையெல்லாம் சரி செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் சாலைகளை செப்பனிடக் கோரியும் பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று காலை பொதுமக்கள் மரப்பாலம் சந்திப்பில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அலுவலக நேரம் என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடலூர் ரோடு, 100 அடி ரோடு போன்ற பகுதிகளில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் கிடைத்தும் போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்வரன், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் அங்கு விரைந்து வந்து பாஸ்கர் எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் களது சமரசத்தை ஏற்கவில்லை.
இந்தநிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாஸ்கர் எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சம்பவ இடத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பாஸ்கர் எம்.எல்.ஏ.விடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இன்னும் 3 நாட்களுக்குள் சாலையை சீரமைத்து விடுவதாக உறுதியளிக்கப்பட்டது. அதை ஏற்று பாஸ்கர் எம்.எல்.ஏ.வும், பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகே போக்குவரத்து சீரானது.