களக்காடு அருகே காமராஜர் பீடத்தை இடிக்க எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம் - வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

களக்காடு அருகே காமராஜர் பீடத்தை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதில் ஒரு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-12-11 22:15 GMT
களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் சேரன்மாதேவி - பணகுடி சாலையை அகலப்படுத்தும் பணிக்காக சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. நேற்று களக்காடு அருகே உள்ள தம்பிதோப்பு கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அப்போது ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக கூறி காமராஜர் நினைவு பீடத்தையும், நற்பணி மன்ற கட்டிடத்தையும் இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கிராம மக்கள் காமராஜர் பீடத்தை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி தாசில்தார் நல்லையா, போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீலிசா, களக்காடு இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் சாலையில் இருந்து 25 அடி தூரத்தில் தான் காமராஜர் பீடமும், நற்பணி மன்ற கட்டிடமும் உள்ளது. சாலைப்பணி நடக்கும் போது, தேவைப்பட்டால் இடித்து கொள்கிறோம் என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அந்த ஊரைச் சேர்ந்த சதிஷ் என்ற வாலிபர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பொதுமக்கள் அவரை தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் கட்டிடங்களை இடிக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து தம்பிதோப்பில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்