திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்பு நடைமுறைகள் இன்று முதல் தொடங்கும் - கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. தகவல்
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா போலீஸ் பாதுகாப்பு நடைமுறைகள் இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்கும் என்று கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன் தெரிவித்தார்.
காரைக்கால்,
திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சனீஸ்வரரை தரிசனம் செய்வது வழக்கம்.
2017-ம் ஆண்டுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு நடக் கிறது. அன்று சனிபகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காரைக் கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதுச்சேரி கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்த மோகன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு, முழு பாதுகாப்பு வழங்குவது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக புதுச்சேரியில் இருந்து சிறப்பு படை வரவழைக்கப்படும். வரும் சனிக்கிழமையில் இருந்து (இன்று) முதல் போலீசாரின் பாதுகாப்பு நடைமுறைகள் தொடங்கப்படும்.
கோவில் நிர்வாகம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. அதன்படி உரிய சோதனைக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து காரைக்கால் நகரம், கோட்டுச்சேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்தமோகன் ஆய்வு செய்து போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகள் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட், போலீஸ் சூப்பிரண்டுகள் வீரவல்லபன், ரகுநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.