கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கட்டிட தொழிலாளி கொடூர கொலை மனைவி, கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை
ஓசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கட்டிட தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். திட்டம் போட்டு தீர்த்து கட்டிய மனைவி மற்றும் கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சீங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் தனபால் (வயது 27). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சத்யா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இவர்கள் ஓசூரில் ஜூஜூவாடியில் எழில்நகரில் குடியிருந்து வந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் நேற்று காலை தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் தனபால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசார் கொலை நடந்த இடத்திற்கு சென்றனர். அவர்கள், கொலையுண்ட தனபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட தனபாலின் மனைவி சத்யாவிற்கும், மணிகண்டன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த தனபால் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் சத்யா அடிக்கடி தனது கள்ளக்காதலனுடன் போனில் பேசி வந்தார்.
இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சத்யா, தனது கள்ளக்காதலனிடம் தனது கணவர் இருக்கும் வரையில் தன்னால் கள்ளக்காதலை தொடர முடியாது, என கூறியுள்ளார்.
இதனால் தனது கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்த சத்யா, கள்ளக்காதலன் மணிகண்டனுக்கு திட்டம் வகுத்து கொடுத்தார். இரவில் கணவர் வீட்டுக்கு தூங்க வந்ததும், வீட்டு கதவை பூட்டாமல் விட்டு விடுவேன், அப்போது வந்து கொலை செய்து விடும்படி கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கூறியுளளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தனபால் வந்தார். பின்னர் அவர் தூங்கி விட்டார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் கத்தியால் தனபால் தலையில் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கொலையுண்ட தனபாலின் மனைவி சத்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரிடமும் ஓசூர் சிப்காட் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவனை கள்ளக்காதலன் உதவியுடன் மனைவியே தீர்த்து கட்டிய பயங்கர சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.