2ஜி வழக்கில் தீர்ப்பு வரும்முன் அவசரம்: வக்கீல் ஜோதியுடன் விவாதிக்க ஆ.ராசா தயாரா? வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சவால்

2ஜி வழக்கில் தீர்ப்பு வரும்முன் அவசரப்படும் ஆ.ராசா, வக்கீல் ஜோதியுடன் விவாதிக்க தயாரா? என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சவால் விடுத்தார்.

Update: 2020-12-11 15:02 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், அங்குவிலாஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

திண்டுக்கல்லில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திட்டங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடியும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறார். இதனால் எங்கு சென்றாலும், மக்கள் திரண்டு வந்து ஆதரவு அளிக்கின்றனர். ஆனால், அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அதற்காக அ.தி.மு.க. அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். எதுவும் எடுபடவில்லை.

தற்போது ஜெயலலிதா மீது ஆ.ராசா பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். 2ஜி ஊழலில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த ஆ.ராசாவுக்கு, ஜெயலலிதா பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை. 2ஜி வழக்கில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளது. தினமும் விசாரணை நடைபெற்று, விரைவில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அதில், ஆ.ராசா நிரபராதி என்றால் பாராட்டலாம். அதற்குள் அவருக்கு என்ன அவசரமோ?. ஆ.ராசா, முதல்-அமைச்சரை விவாதத்துக்கு அழைக்கிறார். ஜெயலலிதா மீதான வழக்கில் ஆஜரான வக்கீல் ஜோதி, ஆ.ராசாவை விவாதத்துக்கு அழைக்கிறார். உண்மையிலேயே தி.மு.க.வுக்கு அரசியல் ஆண்மை இருந்தால், வக்கீல் ஜோதியுடன், ஆ.ராசா விவாதிக்க தயாரா? இதை நான் ஒரு சவாலாக கூறுகிறேன்.

தி.மு.க. ஆட்சியில் திண்டுக் கல்லில் மருத்துவ கல்லூரிக்கு பூமிபூஜை நடத்தினர். ஆனால் நிதி ஒதுக்கவில்லை. அதே நேரம் திண்டுக்கல் உள்பட 11 ஊர்களில் அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்த உத்தமன், எடப்பாடி பழனிசாமி ஆவார். எனவே, மக்களின் ஆதரவு அ.தி.மு.க.வுக்கு பெருகி வருகிறது. ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி விட்டது. ஓராண்டுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது. வேடசந்தூர் குடகனாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், பரமசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன், அண்ணா தொழிற்சங்க தலைவர் ஜெயராஜ், செயலாளர் ஜெயராமன், டாஸ்மாக் தொழிற்சங்க பேரவை செயலாளர் சசிக்குமார், பாசறை செயலாளர் வேலவன், மாவட்ட கவுன்சிலர் முருகன், சீலப்பாடி கூட்டுறவு சங்க தலைவர் டி.முத்துச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தென்னம்பட்டி பழனிசாமி, பி.கே.டி.நடராஜன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள், இளைஞர் அணி இணை செயலாளர் சபரிநாதன், மருத்துவ அணி செயலாளர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகி மலர் சின்னத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்