நாட்டறம்பள்ளி சம்பவத்தில் திடீர் திருப்பம்: விவசாயியை மனைவியே எரித்து கொன்றது அம்பலம் - பரபரப்பு வாக்குமூலம்

நாட்டறம்பள்ளி அருகே விவசாயியை மனைவியே உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார். நடத்தையில் சந்தேகப்பட்டதால் எரித்து கொன்றதாக அவரது வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2020-12-11 14:04 GMT
நாட்டறம்பள்ளி, 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பி.பந்தரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் சசிகுமார் (வயது 30). இவரது மனைவி சக்திபிரியா (30). இவர்களுக்கு பிரதீப் (10) என்ற மகனும், பிரித்திகா (8) என்ற மகளும் உள்ளனர். சசிகுமார் வெளிநாட்டில் வேலைசெய்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பி சோமநாயக்கன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சக்திபிரியா அடிக்கடி சிலஆண்களுடன் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த சசிகுமார் மனைவியை கண்டித்துள்ளார். கணவர் தன்னை கண்டிப்பது சக்திபிரியாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவும், சசிகுமார், சக்திபிரியா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் தூங்கச்சென்றுள்ளனர். சசிகுமார் தனது குழந்தைகளுடன் தூங்கியிருக்கிறார். அப்போது சசிகுமாரை கொலைசெய்யும் நோக்கத்தில், அவர் மீது சக்திபிரியா பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

அருகில் படுத்திருந்த குழந்தைகள் மீதும் பெட்ரோல் பட்டிருந்ததால் அவர்கள் மீதும் தீ பற்றிக்கொண்டது. இதில் வலிதாங்க முடியாமல் அலறி உள்ளனர். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சசிகுமார், இரண்டு குழந்தைகளை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சசிகுமார் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதுகுறித்து சசிகுமாரின் தாய் சிவகாமி கொடுத்த புகாரின்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து சக்திபிரியாவை கைது செய்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் தன்மீது கணவன் சசிகுமார் சந்தேகப்பட்டால் அவரை தீ வைத்து கொன்றதாக கூறியுள்ளார்.

மேலும் சக்திபிரியாவுடன் செல்போனில் பேசியவர்கள் யார்? யார்? என்பதை கண்டறிந்து அவர்களில் சிலரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்