தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ‘கைத்தறி நெசவு தொழில் செழிக்க நடவடிக்கை’ கனிமொழி எம்.பி. உறுதி

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கைத்தறி நெசவு தொழில் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார்.

Update: 2020-12-11 13:04 GMT
சுல்தான்பேட்டை, 

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரசார பயணத்தை மாநிலம் முழுவதும் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. மேற்கொண்டு வருகிறார். அதன்படி சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை ஆகிய பகுதிகளுக்கு வந்த அவர், கட்சி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து கைத்தறி நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கொரோனா பரவலால் கைத்தறி நெசவு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. உரிய நேரத்தில் கூலி கிடைப்பது இல்லை. குழந்தைகளின் கல்விக்கடன் உள்பட பல்வேறு கடன்களை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளோம் என்று சிலர் கூறினர். அதற்கு, தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கைத்தறி நெசவு தொழில் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

பின்னர் சுல்தான்பேட்டை தனியார் மண்டபத்தில் அருந்ததியின மக்களை சந்தித்து பேசினார். அதில் ஊராட்சி தலைவராகவும், செயலாளராகவும் இருக்கும் அருந்ததியினத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். மேலும் சமுதாய கூடங்கள், கழிப்பிடங்கள் இல்லை என்று கூறினர். தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி. கூறுகையில், உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கவில்லை. சுழல் நிதி சரிவர வழங்கப்படுவது இல்லை. தி.மு.க. ஆட்சி அமைந்ததும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்படும் என்றார்.

பின்னர் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் முனைவோர், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், விசைத்தறியாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மாவட்டந்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்கப்படும். நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தன்னை விவசாயி எனக்கூறி வரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும் அது நல்ல சட்டம் என்று ஆதரித்து பேசுகிறார். அதற்கு என்ன காரணம்? என்று தெரியவில்லை. இன்னும் 5 மாதங்களில் அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்படும். அதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.

இதில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி, சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.வி.மகாலிங்கம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செஞ்சேரி முத்துமாணிக்கம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிமேற்கு மண்டல இளைஞர் அணி செயலாளர் காமநாயக்கன்பாளையம் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து சூலூர், கருமத்தம்பட்டி பகுதிக்கு கனிமொழி எம்.பி. வந்தார். பின்னர் சோமனூர் பஸ் நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கால் இழந்த லதா என்ற இளம்பெண்ணுக்கு நிதி உதவி வழங்கினார். மேலும் பஸ் நிலைய விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தவும், அந்த இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்கவும் தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் கிட்டாம்பாளையத்தில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான ஆட்சி நடக்கிறது. எந்தவொரு அரசு பணிகளை மேற்கொள்ளவும் லஞ்சம் பெறப்படுகிறது. இந்த நிலை தி.மு.க. ஆட்சியில் மாறும் என்றார்.

மேலும் செய்திகள்