காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு: விஷம் குடித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை

சங்கராபுரம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-11 02:05 GMT
சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள ச.செல்லம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாகப்பிள்ளை. இவரது மகன் சோபன்பாபு (வயது 29). பி.எஸ்சி. பட்டதாரி. இவரும் இளம்பெண்ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நிலையில் சோபன்பாபு, தான் ஒரு பெண்ணை காதலிப்பது குறித்து தனது தந்தை தாகப்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், நீ காதலிக்கும் பெண் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், ஊரில் பிரச்சினை ஏற்படும். அதனால் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடியாது என்றும், காதலை கைவிடுமாறும் கூறியுள்ளார்.

தற்கொலை

இதற்கிடையே சோபன்பாபுவுக்கு, அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க, பெண்ணின் பெற்றோரும் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சோபன்பாபு, விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தாகப்பிள்ளை அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் பட்டதாரி வாலிபர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்