பசுவதை தடை சட்டத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் நிலைப்பாடு என்ன? குமாரசாமி விளக்கம்

பசுவதை தடை சட்ட விஷயத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-12-10 22:15 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசு பசுவதை தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பசுவதை தடை சட்ட மசோதா விஷயத்தில் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்கு வங்கியே முக்கியம். ஜனதா தளம்(எஸ்) ஒரு கட்சியாக மட்டுமில்லாமல், ஒரு விவசாய சங்கமாகவும் இந்த பணியை மேற்கொள்ள இருக்கிறது.

இந்த தடை சட்டம் பசுக்களை கொல்வதை தடை செய்வதுடன் பசுக்களை பாதுகாப்பது மற்றும் பசுக்களை நம்பியுள்ள விவசாயிகளை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இது தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இந்த பசுவதை தடை சட்டம், விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பசு மாடுகள் அவர்களுக்கு எப்படி சுமையாக இருக்கும் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே கஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு இந்த சட்டத்தால் அவர்களின் வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்பதை அரசு மறந்துவிட்டது. கிராமப்புற மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக பால் உற்பத்தி தொழில் உள்ளது. பசுவதை தடை சட்டத்தால் அந்த மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அரசின் இந்த சட்டத்தால் ஆண் கன்று குட்டிகள், வயதான மற்றும் நோய்வாய்பட்ட பசு மாடுகளை விவசாயிகளே வைத்து வளர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதன் காரணமாக பால் உற்பத்தி தொழிலில் இருந்து விவசாயிகள் விலக நேரிடும். அதனால் பால் உற்பத்தியில் பெரிய பாதிப்பு ஏற்படும்.

வயதான-நோய்வாய்பட்ட மாடுகளை கொல்ல கால்நடைத்துறை அதிகாரியிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை டாக்டரே கிடைப்பது இல்லை. இந்த சூழ்நிலையில் முன் அனுமதி பெற கால்நடைத்துறை அதிகாரிகள் கிடைப்பார்களா?.

பசுக்களை கொல்வதை தடுக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கமாக இருந்தாலும், இதனால் விவசாயிகள் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்படும். இதை தடுக்க அரசு மாற்று வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த சட்டம் விவசாயிகளுக்கு விரோதமானதாக அமைந்துவிடும். இந்த சட்ட விஷயத்தில் எங்களுக்கு வாக்கு வங்கி அரசியல் தேவை இல்லை. பசுக்களை பாதுகாக்கும் நமது முயற்சியில் விவசாயிகளை நெருக்கடியில் தள்ளக்கூடாது என்பது எங்களின் விருப்பம். விவசாயிகளுக்கு சுமையாக இருக்கும் பசு மாடுகளை பாதுகாக்கும் பணியை அரசே செய்ய வேண்டும். பசுக்களுடன் விவசாயிகளையும் இந்த அரசு பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்