தேனி நகரில் பேரிடர் அபாயம்: வணிக கட்டிடங்களுக்குள் ஊற்றெடுக்கும் தண்ணீர்; மோட்டார் மூலம் வெளியேற்றும் வியாபாரிகள்
தேனி நகரில் பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள ஏராளமான கட்டிடங்கள் 30 ஆண்டுகள் பழமையானவையாகும். பல கட்டிடங்கள் தீயணைப்பு துறையின் சான்றிதழ் பெறாமல் காற்றோட்ட வசதி இல்லாதவையாக உள்ளன.
இவற்றில் 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைத்தளத்துக்கு கீழ் மற்றொரு தள வசதியுடன் கட்டப்பட்டவை. இதுபோன்ற கட்டிடங்களில் தற்போது தண்ணீர் ஊற்றெடுக்க தொடங்கி உள்ளது. தேனி நகரில் பெய்யும் மழைநீர் சாலையோர வடிகால் வழியாக ராஜவாய்க்காலில் கலந்து, அதன் வழியாக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமரைக்குளம் கண்மாயில் கலப்பது வழக்கம். ஆனால், ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.
இந்த வாய்க்காலை தூர்வார ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தூர்வாரும் பணியை தொடங்கிய சில நாட்களில் பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. ராஜவாய்க்காலை தூர்வாரும் பணியை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் கைவிட்டதன் விளைவாக தேனி நகரில் பெய்யும் மழைநீர் வடிந்து செல்வதற்கு வழியின்றி சாலையில் தேங்குகிறது. சாலையோர மழைநீர் வடிகால்களும் தூர்ந்து போய் உள்ளதால், கட்டிடங்களின் கீழ் தளங்களுக்குள் தண்ணீர் ஊற்றெடுக்கத் தொடங்கி
உள்ளது.
இதனால், நகரில் 20-க்கும் மேற்பட்ட வணிக கட்டிடங்களில் தினமும் தரைத்தளத்தில் தேங்கும் தண்ணீரை வியாபாரிகள் மோட்டார்கள் மூலம் வெளியேற்றுகின்றனர். இதே நிலைமை நீடித்தால் கட்டிடங்கள் வலுவிழந்து இடிந்து விழவோ, மண்ணுக்குள் புதையவோ வாய்ப்புகள் உள்ளன. இதனால், எந்த நேரத்திலும் பேரிடர் ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.