மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து: புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் சாவு
கோவையில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
வடவள்ளி,
கோவை வடவள்ளி கருப்பசாமி முதலியார் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜய் (வயது22). இவர் கோவையில் உள்ள பொம்மணம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரத்துக்கு சென்று விட்டு வடவள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து தொண்டாமுத்தூர் சாலையில் ஒரு ஓட்டல் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள் எதிரே சாலையில் நடந்து சென்ற நவாவூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஆறுச்சாமி (51) என்பவர் மீது மோதியது.
இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுச்சாமி பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வாலிபர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.