அருப்புக்கோட்டையில் மக்களிடம் குறை கேட்ட தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ.
அருப்புக்கோட்டை தி.மு.க. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. மக்களிடம் குறைகள் கேட்டனர்.
அருப்புக்கோட்டை,
தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டையில் திருச்சி சிவா எம்.பி. சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வும் உடன் சென்றார். இவர்கள் இருவரும் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள மக்களிடம் குறைகள் கேட்டறிந்தனர்.
முன்னதாக அவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி தங்களது தேர்தல் பணியை தொடங்கினர்.
அதனைத்தொடர்ந்து பஜாரில் உள்ள ஜவுளி கடை, நகைக்கடை உரிமையாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அடுத்தபடியாக ஆமணக்குநத்தம், சிதம்பராபுரம் பகுதிகளிலுள்ள விவசாயிகளை சந்தித்து தொடர் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட்டனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம், திருநகரம் பகுதிக்கு சென்று நெசவாளர்கள், சாயப்பட்டறை தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களை சந்தித்து அவர்களுக்கான கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் நெசவாளர்களின் பகுதிக்கு நேரடியாக சென்று விசைத்தறி மற்றும் சாயப்பட்டறைகளை நேரில் பார்வையிட்டனர்.
அப்போது முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேஷ், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு, நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, விசைத்தறி சங்க தலைவர் கணேசன், உரிமையாளர்கள் சவுண்டையா, ராஜ்குமார், அறிவானந்தம், திருமாவளவன் உள்பட நெசவாளர்கள் பலர் உடனிருந்தனர்.