ரெயில் மறியலுக்கு முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் 27 பேர் கைது

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-12-10 05:11 GMT
ஈரோடு,

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதுடெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் மிகப்பெரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகளும் கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமையில் பலரும் வந்து காளை மாடு சிலை பகுதியில் கூடினார்கள். அங்கு ரெயில் மறியல் போராட்டத்தை அ.கணேசமூர்த்தி எம்.பி. தொடங்கி வைத்தார்.

27 பேர் கைது

அதைத்தொடர்ந்து கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நிலவன் உள்பட போராட்டக்குழுவினர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

அவர்கள் ரெயில் நிலையத்துக்கு சென்று மறியல் செய்ய அனுமதி இல்லை என்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன் கார்த்திக்குமார், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் போராட்டக்குழுவினரை தடுத்தனர். ஆனால், தடையை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்