மழை வெள்ள பாதிப்பு: சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும் அனைத்து துறை அலுவலர்களுக்கு அமைச்சர்கள் உத்தரவு

மழை வெள்ள பாதிப்பு தொடர்பான சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கு 3 அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2020-12-10 03:24 GMT
விருத்தாசலம்,

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கூறியதாவது:-

கண்டிப்பாக நிவாரணம் வழங்கப்படும்

நிவர் புயல் பாதிப்பு ஏற்பட்டவுடன் முதல்-அமைச்சர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு, மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த உத்தர விட்டார். மீண்டும் 2-வது முறையாக புரெவி புயல் காரணமாக அதிக மழையினால் சேதமடைந்த பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக இருந்தாலும், பகுதியாக இருந்தாலும் விவரங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்ட மக்கள் மீது முதல்-அமைச்சர் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். இந்த மாவட்டத்திற்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் மேற்கொள்வதோடு, அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளார். எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும்.

முறையாக கணக்கெடுக்க வேண்டும்

அதன்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், சிறப்பு அதிகாரிகள், கலெக்டர் ஆகியோர் மேற்பார்வையுடன், அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு சேத விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர். ஊராட்சி அளவிலும், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் முழுமையாக பாதிப்பு இருந்தாலும், பகுதியாக பாதிப்பு இருந்தாலும் விடுபடாமல் அதனை முறையாக கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பசு, எருமை மாடுகள், கன்றுகள், ஆடுகள், கோழிகள் போன்ற இறப்புகள் குறித்தும் கணக்கெடுக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை உடனடியாக கணக்கெடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தகுந்த நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீட்பு பணிகளை துரிதப்படுத்த வெளி மாவட்டங்களில் இருந்து பொக்லைன் மற்றும் மிதவை எந்திரங்கள் போன்றவை வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 2 மிதவை எந்திரங்கள் மாவட்டத்திற்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் பார்வையிட்டனர்

தொடர்ந்து, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பொன்னேரியில் மழைநீர் வடிந்து செல்வதையும், கீழ்நத்தம் பகுதியில், கனமழையால் விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள நெற்பயிர் சேதங்களையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து தெற்கு விருதாங்கநல்லூர் பகுதியில் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினர்.

பின்னர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சாத்தப்பாடி, எல்லைகுடி, ஆலம்பாடி மற்றும் கீரப்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்த கண்ணங்குடி, பால்கார மேடு உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடி, சிறப்பு அதிகாரிகள் டி.பி.ராஜேஷ், விசுமகாஜன், கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், கே.ஏ.பாண்டியன், கலைச்செல்வன், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமாறன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவின்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், கீரப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ் பட ஆண்டவர், துணைத்தலைவர் காஷ்மீர் செல்வி விநாயகமூர்த்தி, புவனகிரி ஒன்றியக்குழு தலைவர் சிவப்பிரகாசம், துணைத்தலைவர் வாசுதேவன், புவனகிரி தாசில்தார் சுமதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் மனு

இதேபோல் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, எம்.சி.சம்பத் ஆகியோர் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை இடையில் பழத்தோட்டத்தில் சேதமடைந்த சாலையை பார்வையிட்டனர். பின்னர் விருத்தாசலம் நகர பகுதியில் இருந்து கொடுக்கூர் செல்லும் வழியில் கோமங்கலம் நோக்கி புறப்பட்டனர். அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள் கார்மாங்குடி வெங்கடேசன், விஜயகுமார், உழவர் மன்றத் தலைவர்கள் இலங்கியனூர் சவுந்தரராஜன், சிறுபாக்கம் மணிகண்டன், தொழுதூர் செல்வமணி, வடகாரம்பூண்டி ராமசந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் மழைவெள்ளத்தில் சேதமான நெல், மணிலா, உளுந்து, மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்களை கையில் வைத்துக்கொண்டு அமைச்சர்கள் சென்ற காரை நிறுத்தி, மழையால் சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி மனு அளித்தனர்.

தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம்

அதனை தொடர்ந்து விருத்தாசலம் சேலம் சாலை வழியாக சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். தொடர்ந்து எடையூர் பெரம்பலூர் இடையே செல்லும் உப்பு ஓடையில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்த இடத்தையும் பார்வையிட்டனர். அப்போது விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா, நகராட்சி ஆணையாளர் பாண்டு, ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை, மாவட்ட பேரவை செயலாளர் என்ஜினீயர் ரவிச்சந்திரன், அரசு வக்கீல் விஜயகுமார், மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக விருத்தாசலம் புறவழிச்சாலை அய்யனார் கோவில் அருகே நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர்கள் விருத்தாசலம் தெற்கு தம்பிதுரை, விருத்தாசலம் வடக்கு பாலதண்டாயுதம், நல்லூர் வடக்கு பச்சமுத்து, கம்மாபுரம் தெற்கு முனுசாமி, கம்மாபுரம் வடக்கு சின்ன ரகுராமன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்