விழுப்புரத்தில் தொண்டு நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் தனியார் தொண்டு நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-12-10 02:47 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் முத்தோப்பு அகரம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 39). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.

பின்னர் வேலை முடிந்து இரவு 9 மணியளவில் அவர் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. அந்த பீரோக்களை பார்த்தபோது ஒரு பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் மற்றொரு பீரோவில் இருந்த ரூ.28 ஆயிரம் ரொக்கம், ½ பவுன் நகை ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். கணேஷ், வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்