பூந்தமல்லியில் ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து - எந்திரத்தில் இருந்த ரூ.22 லட்சம் தப்பியது
பூந்தமல்லியில் ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனாலும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.22 லட்சம் தப்பியது.
பூந்தமல்லி,
பூந்தமல்லி டிரங்க் சாலையில் ருக்மணி நகர் செல்லும் வழியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. நேற்று காலை திடீரென்று இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம், பக்கத்தினர் மற்றும் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதற்குள் தீ மளமளவென ஏ.டி.எம். மையம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. ஏ.டி.எம். எந்திரத்திலும் தீப்பிடித்து கொண்டது. இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஏ.டி.எம். மையத்தில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் ஏ.டி.எம். மையம் முற்றிலும் எரிந்து நாசமானது. ஏ.டி.எம். எந்திரமும் தீயில் சேதம் அடைந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள ‘லாக்கரை’ திறந்து பார்த்தனர். அதில் ரூ.22 லட்சத்து 8 ஆயிரம் தீ விபத்தில் எந்த சேதமும் இன்றி அப்படியே பாதுகாப்பாக இருந்தது.
ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.