திருப்போரூர் அருகே பரிதாபம்: குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
திருப்போருர் அருகே வீட்டின் அருகே இருந்த குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 3 சிறுமிகள், குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.
திருப்போரூர்,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமம், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார். இவரது மனைவி கல்பனா. இவர்களது மகள் சாதனா (வயது 5). இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் நிலையில், அருகில் வசிக்கும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹரிசங்கர்- சுசீலா ஆகியோரின் குடும்பத்துடன் நட்பாக பழகி வந்தனர். இந்த தம்பதியரின் குழந்தைகள் ரம்யா (4), ராகினி (6). இந்த நிலையில் சிறுமிகளான சாதனா, ராகினி மற்றும் ரம்யா ஆகியோர் மூவரும் வீட்டின் அருகே விளையாடி வருவது வழக்கம்.
நேற்று காலை சிறுமிகள் 3 பேரும் வீட்டின் அருகே விளையாடிய நிலையில், ஆலத்தூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அருகில் உள்ள புறா குட்டை எனும் குளம் அருகே விளையாட சென்றனர். இந்நிலையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை காணாததை கண்டு பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது குளம் அருகில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்ததாக வாலிபர் ஒருவர் கூறியதாக தெரிகிறது.
உடனே பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குளக்கரைக்கு சென்று தேடிப் பார்த்தபோது கரையோரத்தில் 3 குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் கட்டி அணைத்தபடி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 சிறுமிகளும் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் இறந்த தகவலை அறிந்த வடமாநில தொழிலாளி ஹரிசங்கர் அதிர்ச்சியடைந்ததில், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வீடுகள் நிறைந்த அப்பகுதியில் உள்ள குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் தவறி விழுந்து, மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.