கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 334 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 334 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-09 22:00 GMT
திருவேங்கடம்,

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், திருவேங்கடம் தபால் நிலையம் அருகில் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட பொருளாளர் சுப்பையா, வட்டார செயலாளர்கள் வேணுகோபால், குருசாமி, விவசாயிகள் சங்க செயலாளர் கருப்பசாமி, வக்கீல் ராகவன், உச்சிமாகாளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 100 பேரை திருவேங்கடம் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோன்று பாவூர்சத்திரம் மெயின் ரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தங்கம், இந்திய கம்யூனிஸ்டு அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 65 பேரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல சிவகிரியில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துபாண்டி, ஒன்றிய செயலாளர் நடராஜன், பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்க பாண்டியன், ஒன்றிய தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 139 பேரை சிவகிரி போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று இடைகால் தபால் நிலையத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கிளை பொதுச்செயலாளர் ஞானபிரகாசம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை இலத்தூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்