இலக்கியம்பட்டியில் ரூ.10 கோடியில் புதிய துணை மின் நிலையம் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
இலக்கியம்பட்டியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரி இலக்கியம்பட்டியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.10.10 கோடி மதிப்பில் புதிதாக துணை மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இந்த புதிய துணை மின் நிலையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக தர்மபுரி இலக்கியம்பட்டியில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் கார்த்திகா கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் துணை மின் நிலைய செயல்பாட்டை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது கலெக்டர் கூறியதாவது.
இலக்கியம்பட்டியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டதால் இதனை சுற்றி சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்படும். மேலும் இந்த துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும். இதனால் 14,000 மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
இந்த துணை மின் நிலையம் அமைக்கப்பட்டதால் அருகில் உள்ள தர்மபுரி துணைமின் நிலையம் மற்றும் அதியமான்கோட்டை துணை மின் நிலையங்களில் மின் பளு குறையும். மேலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் பன்னீர்செல்வம், செயற்பொறியாளர்கள் ரமேஷ், சேகர், இந்திரா, உதவி செயற்பொறியாளர்கள் இந்திராணி, சத்தியமாலா, உதவி பொறியாளர் பசுபதி மற்றும் பொதுமக்கள், மின்துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.