ஸ்ரீகாளஹஸ்தி அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொன்று, விவசாயி தற்கொலை
ஸ்ரீகாளஹஸ்தி அருகே 2-வது மனைவியை கழுத்தை அறுத்து கொலைசெய்த விவசாயி, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீ காளஹஸ்தி,
சித்தூர் மாவட்டம் ராமச்சந்திராபுரம் மண்டலம் அனுப்பள்ளி பஞ்சாயத்து கட்டக்கிந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் ரெட்டி (வயது 34). விவசாயி. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. ஒரு சில நாட்களிலேயே மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் சவுடேப்பள்ளி மண்டலம் முரக்கம்கிந்த பள்ளி கிராமத்தை சேர்ந்த சிரிஷா (23) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் பாக்ராபேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இரண்டாவது மனைவி சிரிஷாவை, வெங்கடேஷ் ரெட்டி துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அப்பகுதியினர் வெங்கடேஷ் ரெட்டியை வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றி உள்ளனர். அதனைத் தொடர்ந்து வெங்கடேஷ், மனைவியை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான கட்டக்கிந்தப்பள்ளி கிராமத்திற்கு வந்தார். ஆனால் மனைவியுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதை அறிந்த சிரிஷாவின் பெற்றோர்கள் அவரை தாய் வீட்டிற்கு வந்துவிடும் படி கூறினர். ஆனால் அவர் கணவருடனேயே இருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்று மனைவியிடம் கூறி கிராமம் அருகில் உள்ள மாந்தோட்டத்திற்கு சிரிஷாவை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிரிஷாவை கழுத்தை அறுத்து கொலைசெய்துள்ளார். அதன் பின்னர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதைபார்த்த பொதுமக்கள் இரு வீட்டார்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிந்துள்ளனர். தகவல் அறிந்ததும் ராமச்சந்திராபுரம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வெங்கடேஷ் ரெட்டியை மீட்டு திருப்பதி ருயா மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ராமச்சந்திராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரா, இன்ஸ்பெக்டர் அமர்நாத் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சேகரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.