விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சாலை மறியல்

விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-09 01:04 GMT
திருச்சி,

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ நடத்தப்பட்டது.

அதன்படி, திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை தி.மு.க. முதன்மை செயலாளரான கே.என்.நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், வடக்கு மாவட்ட தலைவர் கலை, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறியாளர் பிரிவு தலைவர் என்ஜினீயர் கணபதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின்போது மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் பாடகர் கோவன் தலைமையில் பறையடித்தபடியும், மத்திய அரசுக்கு எதிராக பாடல்களை பாடியபடியும் வந்து மறியலில் ஈடுபட்டனர்.

கம்யூனிஸ்டு கட்சி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் இந்திரஜித், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா, மாநில துணைத்தலைவர் முகமது அலி உள்ளிட்டவர்களும் அணி அணியாக வந்து சாலை மறியலில் பங்கேற்றனர். மேலும் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையிலும் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், ஏ.ஐ.டி.யு.சி, இந்திய மருத்துவர் சங்கத்தினர், பார்வர்டு பிளாக் கட்சியினர், சமூக ஜனநாயக நலக்கூட்டமைப்பு, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

400 பேர் கைது

சாலைமறியல் போராட்டத்தையொட்டி, கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வெஸ்ட்ரி பள்ளி மற்றும் மண்டபங்களில் காவலில் வைக்கப்பட்டனர்.

ஸ்ரீரங்கம்

இதேபோல, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தையொட்டி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கடைகள் பெரும்பாலானவை அடைக்கப்பட்டிருந்தன.

மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

விவசாயிகளுக்கு ஆதரவாக சோமரசம்பேட்டையில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் அல்லித்துறையில் இருந்து புறப்பட்டு சோமரசம்பேட்டை வழியாக திருச்சி புத்தூர் 4 ரோடு வரை செல்ல திட்டமிடப்பட்டது. ஊர்வலத்தில் தமிழக விவசாய சங்க தலைவர் சின்னத்துரை, சமூக நீதிப்பேரவை மாவட்ட தலைவர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் புறப்பட்டு வந்தது. மோட்டார் சைக்கிள் ஊர்வலம் திருச்சி மாநகர எல்லையான வயலூர் ரோட்டில் வந்தபோது உறையூர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சோமரசம்பேட்டை-திருவெறும்பூர்

மணிகண்டம் ஒன்றியம் சோமரசம்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 238 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

லால்குடி

லால்குடியில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திருச்சி-அரியலூர் நெடுஞ்சாலையில் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். அவர்களை லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்.

மேலும் செய்திகள்