போலீஸ் தடையை மீறி விமானம் மூலம் பயணம்: டெல்லி போராட்டத்தில் பங்கேற்க சென்ற அய்யாக்கண்ணு சிறை வைப்பு

போலீஸ் தடையை மீறி டெல்லி போராட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற அய்யாக்கண்ணு அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார்.

Update: 2020-12-09 00:46 GMT
திருச்சி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் மாநில விவசாயிகள் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர்.

அதன்படி நேற்று எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் திருச்சியை சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு டெல்லி போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து ரெயிலில் புறப்பட ஆயத்தமானார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அய்யாக்கண்ணு சிறை வைப்பு

மேலும், அவர் வெளியே வர முடியாதபடி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவருடைய வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் அய்யாக்கண்ணு ஒரு வழக்கு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கூறி மதுரைக்கு சென்றார். பின்னர் அவர் மேலும் 3 பேருடன் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்தார்.

இதுபற்றி தகவலறிந்த டெல்லி போலீசார் அய்யாக்கண்ணு உள்பட 4 பேரும் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அவர்களை அடையாளம் கண்டு காரில் அழைத்துச்சென்று கரோல் பார்க் என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் சிறை வைத்ததாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், திருச்சியில் இருந்து ரெயில் மூலம் டெல்லி சென்ற விவசாயிகள் 30 பேர் அங்கு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்