குடியிருப்பு பகுதிக்குள் வடியாமல் கிடக்கும் வெள்ளம் - வேல்ராம்பட்டு ஏரியின் உயரத்தை குறைக்க நடவடிக்கை
தொடர்மழையால் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம் பல இடங்களில் வடியாமல் கிடக்கிறது. வேல்ராம்பட்டு ஏரியின் நீர்மட்ட உயரத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி,
நிவர், புரெவி புயலால் பலத்த மழை பெய்ததையொட்டி புதுவையில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டுக்கு பின்னர் இப்போதுதான் நகருக்குள் அதிக அளவில் வெள்ளம் புகுந்து ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. உடனுக்குடன் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது.
தற்போது சற்று ஓய்ந்த நிலையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை சுற்றிலும், காலிமனைகளிலும் இன்னும் தண்ணீர் தேங்கி குளமாக கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கடந்த காலங்களில் காலிமனைகளை மண் அடித்து பராமரிக்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டது. தவறிய உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த நடைமுறை பின்பற்றப் படாததால் மழையின்போது காலிமனைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. தொடர்மழை பெய்ததால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின.
உச்சபட்ச கொள்ளளவை எட்டியதால் ஏரிகளும் தண்ணீரை உள்வாங்கும் நிலையில் இல்லை. இதனால் குடியிருப்புகளில் தேங்கிய வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிதாக உருவான விரிவாக்க பகுதிகள் தனித்தீவுகளாக மாறியுள்ளன. இதனால் அங்கு வசிப்பவர்கள் அத்தியாவசிய தேவைக்காக தண்ணீரில் இறங்கிச் சென்று அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தொடர்மழையால் வில்லியனூர், மணவெளி, பாகூர், குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம் பல இடங்களில் வடியாமல் கிடக்கிறது.
புதுவை கொம்பாக்கம் பகுதியில் சேரும் மழைவெள்ளம் வேல்ராம்பட்டு ஏரியில் வடியும். இங்கு 2 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதும் மீதமுள்ள தண்ணீர் வெளியே வழிந்தோட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பு சுவர் அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இதனால் மழை விட்ட போதிலும் கொம்பாக்கம் துர்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீர் வடியாமல் உள்ளது. இதேபோல் கொம்பாக்கத்தில் உள்ள தோட்டங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதை வடிய வைக்கும் விதமாக ஏரியின் நீர்மட்ட உயரத்தை குறைக்கவேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வேல்ராம்பட்டு ஏரி நிரம்பிய நிலையில் சுற்றியுள்ள கரையின் மட்டத்துக்கு தண்ணீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் ஏரிக்கு அதிக அளவு தண்ணீர் வந்து கரை உடையும் நிலை ஏற்படலாம். இதனால் வேல்ராம்பட்டு பகுதியே தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
இதை தடுக்கும் வகையில் வேல்ராம்பட்டு ஏரியில் தண்ணீர் தேங்கும் உயரத்தில் ½ அடியை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தேங்கி கிடக்கும் தண்ணீரை ஏரியில் வடிகால் பகுதியை சற்று உடைத்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்காக மணல் மூட்டைகளை அடுக்கி கரைகள் பலப்படுத்தப்படுகிறது. தாசில்தார் ராஜேஷ்கண்ணா மேற்பார்வையில் பொதுப்பணித்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.