மராட்டியத்தில் புதிதாக 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 6 ஆயிரத்து 365 பேர் குணமடைந்தனர்
மராட்டியத்தில் புதிதாக 4 ஆயிரத்து 26 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 365 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இருப்பது பொதுமக்கள் இடையே ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்து 26 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 59 ஆயிரத்து 367 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 17 லட்சத்து 37 ஆயிரத்து 80 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 6 ஆயிரத்து 365 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதேபோல மாநிலத்தில் மேலும் 53 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை மராட்டியத்தில் 47 ஆயிரத்து 827 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். அதாவது நோய் பாதித்தவர்களில் 2.57 சதவீதம் பேர் பலியாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 374 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் மும்பையை பொறுத்தவரை புதிதாக 585 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து 175 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 354 பேர் குணமடைந்து உள்ளனர்.
நகரில் மேலும் 7 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானதால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 920 ஆக அதிகரித்து உள்ளது.