கலபுரகி அருகே, அக்காள்-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
கலபுரகி அருகே அக்காள்-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலபுரகி,
கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தாலுகா அய்யனபுரா கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத். இவரது மகள்கள் ஐஸ்வர்யா (வயது 19), சரிகா(17). இவர்கள் 2 பேரும் கல்லூரி ஒன்றில் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் விஸ்வநாத்தும், அவரது மனைவியும் வெளியே சென்று இருந்தனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வர்யாவும், சரிகாவும் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் வெளியே சென்று இருந்த விஸ்வநாத்தும், அவரது மனைவியும் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது 2 மகள்களும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அவர்களின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் விஸ்வநாத் வீட்டிற்கு சென்றனர். அப்போது அக்காள்-தங்கை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி சிஞ்சோலி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் தூக்கில் தொங்கிய ஐஸ்வர்யா, சரிகாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிஞ்சோலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அறையில் கடிதம் எழுதி வைத்து உள்ளார்களா? என்று போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் கடிதம் எதுவும் சிக்கவில்லை.
ஐஸ்வர்யா, சரிகாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து சிஞ்சோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.