விவசாயிகளின் முழு அடைப்பு வெற்றி பெறவில்லை - எடியூரப்பா பேட்டி

விவசாயிகளின் முழு அடைப்பு வெற்றி பெறவில்லை என்று எடியூரப்பா கூறினார். விவசாயிகள் போராட்டம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

Update: 2020-12-08 22:30 GMT
பெங்களூரு, 

விவசாயத்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளார். விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வது, அவற்றுக்கு ஆதரவு விலை வழங்குவது போன்ற நடைமுறைகள் தொடரும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே புதிய சட்டங்களின் நோக்கம்.

அரசியல் நோக்கத்திற்காக எதிர்க்கட்சிகள் இந்த சட்டங்களை எதிர்க்கின்றன. முன்பு இத்தகைய சட்டங்களை அந்த கட்சிகள் ஆதரித்தன. இப்போது விவசாயிகளை திசை திருப்பும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன. விவசாயிகளுக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களை தடுக்க முயற்சி நடக்கிறது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய சட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் விவசாயிகளின் முழு அடைப்பு வெற்றி பெறவில்லை. யாரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்