கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

இளையரசனேந்தல் பிர்க்காவை கோவில்பட்டியில் இருந்து மாற்றக்கூடாது என வலியுறுத்தி நேற்று விவசாயிகள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2020-12-08 22:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இளையரசனந்தல் பிர்கா உரிமை மீட்புகுழு தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் நாராயணசாமி, ராஜாராம், சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளையரசனேந்தல் பிர்காவைச் சேர்ந்த 12 பஞ்சாயத்துக்கள், கடந்த 2008-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது, உள்ளாட்சி நிர்வாகம் தவிர அனைத்து அலுவலகங்களும் மாற்றப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் 2008-ஆம் ஆண்டில் இருந்து விவசாயத்துறை மற்றும் தோட்டகலைத்துறை கோவில்பட்டியில் இருப்பதால் மேற்படி 12 பஞ்சாயத்துக்களை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், மேற்படி துறைகளை குருவிகுளம் பிர்க்காவிற்கு மாற்ற முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. ஆகவே மேற்படி 12 பஞ்சாயத்துக்களுக்கு உரிய விவசாய மற்றும் தோட்ட கலைத்துறையை கோவில்பட்டியில் இருந்து எக்காரணம் கொண்டும் குருவிகுளத்துக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

உதவி கலெக்டரின் உதவியாளர் முருகானந்தத்திடம், சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்