கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக புகார்
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியை அடுத்துள்ள மந்தித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பேபி (வயது40). இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்துள்ளார். இவரை பரிசோதனை செய்த அரசு மருத்துவர், பேபிக்கு நீர்ப்பை கட்டி இருப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, கடந்த 30-ந்தேதி அறுவை சிகிச்சை மூலமாக நீர்ப்பை கட்டி அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து 1-ந்தேதி மீண்டும் அறுவை சிகிச்சை அறைக்கு பேபியை மருத்துவர் அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று பேபியை பரிசோதனை செய்த மருத்துவர், அவருக்கு தையல் போட வேண்டியது இருப்பதால் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து வரும்படி கூறியுள்ளார்.
இதற்கு பேபியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவர் தவறாக அறுவை சிகிச்சை செய்து விட்டு, மீண்டும் அறுவை சிகிச்சைக்கு அழைப்பதாகக்கூறி பேபியின் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேஸ்வரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அறுவை சிகிச்சை செய்தவருக்கு பரிசோதனை செய்வதற்காக, நோயாளியை மருத்துவர் அழைத்து சென்றுள்ளார். மேலும் அறுவை சிகிச்சை செய்த பகுதி அருகே லேசான வீக்கம் இருந்ததால் அவருக்கு மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். இதை தவறாக புரிந்து கொண்டு போராட்டம் செய்ய வேண்டாம் என அவர்கள் விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு காணப்பட்டது.