பேரம் பேசி ஓட்டுக்கு பணம் வாங்குகின்றனர்: பொதுமக்களே ஊழல்வாதிகளாக மாறிவிட்டதாக நீதிபதிகள் வேதனை
10 ஓட்டுகள், 15 ஓட்டுகள் என பேரம் பேசி பணம் வாங்குவதால், பொதுமக்களே ஊழல்வாதிகளாக மாறியுள்ளனர் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
தேர்தலுக்காக பணம் பதுக்கலா?
மதுரையை சேர்ந்த மூத்த வக்கீல் ரத்தினம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த அக்டோபர் 31-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து கும்பகோணத்தில் அவரது ஆதரவாளர்கள் பலரின் வீடுகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாயை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உண்மையை மறைத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் மீது கும்பகோணம் தாலுகா, கிழக்கு மற்றும் பாபநாசம் போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கும்பகோணத்தில் ரூ.800 கோடியை கைப்பற்றியதாகவும், இந்த தொகை சட்டசபை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அ.தி.மு.க. தலைமை பொறுப்பாளர்களால், துரைக்கண்ணுவின் ஆதரவாளர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் எதிர்கட்சித்தலைவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் மூலம் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, கோடிக்கணக்கான ரூபாயை ரகசியமாக பதுக்கி வைத்துள்ளது தெரியவருகிறது.
சிறப்பு விசாரணை குழு
இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க உரிய வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு புகார் மனுவை இ-மெயில் மூலமாக அனுப்பினேன்.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கும்பகோணத்தில் அ.தி.மு.க.வினர் பெரும் தொகையை பதுக்கியது தொடர்பாகவும், இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்தும் தேர்தல் கமிஷன், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
ஊழல்வாதிகளாக பொதுமக்கள்...
அப்போது நீதிபதிகள், வாக்காளர்கள் 10 ஓட்டு, 15 ஓட்டு என பேரம் பேசி ஓட்டுக்கு பணம் வாங்குகின்றனர். பொதுமக்களே ஊழல்வாதியாக மாறிவிட்டனர் என வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், “ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல்வாதிகள் ரூ.50 கோடியில் இருந்து ரூ.60 கோடி வரை சட்டவிரோதமாக தேர்தலுக்காக செலவு செய்கின்றனர். வருமான வரித்துறைக்கு தெரிந்தே தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அடிப்படையே ஒழுங்காக இல்லை. எனவே மாற்றம் என்பது ஒவ்வொருவரிடமும் இருந்து தொடங்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் கூறினர்.
பின்னர் இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.