விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் விருப்பத்துடன் முழு அடைப்பில் பங்கேற்க வேண்டும் சிவசேனா வேண்டுகோள்
விவசாயிகள் நடத்தும் முழுஅடைப்பில் நாட்டு மக்கள் அனைவரும் விருப்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
மும்பை,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த 5-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விவசாயிகள் நாடு முழுவதும் இன்று(செவ்வாய்க்கிழமை) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.
இதற்கு காங்கிரஸ் உள்பட நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. மராட்டியத்தில் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இதுகுறித்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இது ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் கோரிக்கைகளை எழுப்புவதற்கான முழுஅடைப்பு அல்ல. மாறாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நம் நாட்டு விவசாயிகளின் குரலை வலுப்படுத்துவதற்கான ஒரு போராட்டம்.
எனவே நாட்டு மக்கள் அனைவரும் விருப்பத்துடன் முழு அடைப்பில் பங்கேற்க வேண்டும். அதுதான் விவசாயிகளுக்கு நமது உண்மையான ஆதரவை தெரிவிப்பதாக இருக்கும்.
டெல்லியின் எல்லையில் விவசாயிகள் 12 நாட்களாக கடுங்குளிரை பற்றியோ அரசாங்கத்தின் அடக்குமுறையை பற்றியோ கவலைப்படாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்சிகள் முழு அடைப்பில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. எனவே, விவசாயிகளை ஆதரிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.