சிக்கமகளூரு அருகே பயங்கரம்: வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண் எரித்து கொலை - குழந்தை மீதும் தீவைத்த கொடுமை
சிக்கமகளூரு அருகே வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண்ணை எரித்து கொலை செய்த மாமியார் கைது செய்யப்பட்டார். குழந்தை மீதும் தீவைத்த கொடுமை நடந்துள்ளது.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பில்லேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஈசுவரப்பா. இவரது மனைவி யசோதா. இந்த தம்பதியின் மகள் ஷோபா(வயது 23). இதுபோல சிக்கமகளூரு அருகே சிந்திகெரே கிராமத்தை சேர்ந்த ராஜசேகர்-சந்திரம்மா தம்பதியின் மகன் மிதுன்(28). ஷோபாவும், மிதுனும் உறவினர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஷோபாவுக்கும், மிதுனுக்கும் திருமணம் நடந்து இருந்தது. திருமணத்தின் போது ரூ.1 லட்சம் ரொக்கம், தங்கநகைகளை மிதுனுக்கு வரதட்சணையாக ஷோபாவின் பெற்றோர் கொடுத்து இருந்தனர். திருமணம் முடிந்து சில மாதங்கள் இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களின் வாழ்க்கையில் வரதட்சணை என்ற அரக்கனால் புயல்வீச தொடங்கியது. அதாவது மிதுனும், அவரது பெற்றோரும் அடிக்கடி ஷோபாவிடம் கூடுதலாக ரூ.1 லட்சம் வரதட்சணையாக வாங்கி வரும்படி கேட்டு உள்ளனர். ஆனால் இதற்கு ஷோபா மறுத்து வந்து உள்ளார். இதற்கிடையே மிதுன்-ஷோபா தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து இருந்தது.
ஆனாலும் தொடர்ந்து ரூ.1 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு ஷோபாவுக்கு மிதுனும், அவரது பெற்றோரும் தொல்லை கொடுத்து வந்து உள்ளனர். இதுதொடர்பாக மிதுனுக்கும், ஷோபாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஷோபா தனது குழந்தை குஷாலுடன் வீட்டில் இருந்தார். அப்போது வரதட்சணை வாங்கி வரும்படி மிதுன், ஷோபாவிடம் தகராறு செய்தார்.
ஆனாலும் ஷோபா வரதட்சணை வாங்கி வர மறுத்து விட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த மிதுன், அவரது பெற்றோர் ராஜசேகர், சந்திரம்மா ஆகியோர் ஷோபா மற்றும் குழந்தையின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் ஷோபாவின் உடல் முழுவதும் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அப்போது ஷோபா குழந்தை குசாலை தூக்கி கொண்டு வேறு இடத்தில் போட்டார். இதற்கிடையே ராஜசேகர், சந்திரம்மா, மிதுன் ஆகியோர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் ஷோபாவின் வீட்டில் இருந்து புகை கிளம்பியதால் அங்கு தீ விபத்து ஏற்பட்டு விட்டதாக நினைத்து கிராம மக்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தீயணைப்பு படையினர் வருவதற்குள் கிராம மக்களே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது ஷோபா உடல்கருகிய நிலையில் இறந்து கிடந்தார். குழந்தை குசாலும் லேசான தீக்காயம் அடைந்து இருந்தது. இதையடுத்து குழந்தையை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குழந்தை மேல்சிகிச்சைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்ற சிக்கமகளூரு புறநகர் போலீசார், ஷோபாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வரதட்சணை வாங்கி வர மறுத்த ஷோபாவை, அவரது கணவர் மிதுன், மாமனார் ராஜசேகர், மாமியார் சந்திரம்மா ஆகியோர் சேர்ந்து எரித்து கொலை செய்தது தெரிந்தது.
இதுகுறித்து ஷோபாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மிதுன், ராஜசேகர், சந்திரம்மாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் சிந்திகெரே கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சந்திரம்மாவை போலீசார் கைது செய்தனர். மேலும் மிதுன், சந்திரசேகரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண்ணை கணவர், மாமனார், மாமியார் சேர்ந்து எரித்து கொலை செய்த சம்பவம் சிக்கமகளூரு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.