சென்னை வடபழனியில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக போலீஸ்காரருக்கு அடி-உதை; சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு

சென்னை வடபழனியில் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக சீருடையில் இருந்த போலீஸ்காரரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-12-07 22:44 GMT
பொதுமக்களால் போலீஸ் காரர் தாக்கப்பட்ட காட்சி.
பஸ்சுக்காக காத்திருந்த பெண்
சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல 100 அடி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், அந்த பெண்ணிடம் வீட்டில் கொண்டுபோய் விடுவதாக கூறி தனது மோட்டார்சைக்கிளில் ஏறும்படி கூறினார்.

அதற்கு அந்த பெண் மறுத்தார். ஆனால் அந்த நபர், வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டதால், அந்த நபர் இளம்பெண்ணின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர். அந்த நபர் காக்கி நிற பேண்ட் மற்றும் மழைகோட்டு அணிந்து இருந்தார். முதுகில் ஒரு பை மாட்டி இருந்தார். பொதுமக்கள் வந்ததும் நைசாக அங்கிருந்து நழுவ முயன்ற அவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.

போலீஸ்காரர்
பின்னர்தான் அவர், போலீஸ்காரர் என்பதும், போலீஸ் சீருடையில் குடிபோதையில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட பொதுமக்கள், போலீஸ்காரரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பெண்கள் தங்களது காலணியாலும், அங்கிருந்த ஆண்கள் சிலர் கால்களாலும் அவரை எட்டி உதைத்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் காலில் விழுந்து போலீஸ்காரரை மன்னிப்பு கேட்க வைத்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணையும் வலுக்கட்டாயமாக போலீஸ்காரரை காலணியால் தாக்கும்படி கூறினர். அங்கிருந்த பெண் ஒருவர், “போலீஸ் சீருடையில் குடிக்கலாமா?. “உனது மகள் போன்றவளிடம் தவறாக நடக்கலாமா?” என சரமாரியாக கேள்விகள் கேட்டார்.

ஆனால் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் போலீஸ்காரர், தான் பணி முடிந்து வீட்டுக்கு செல்வதாகவும், பெண்ணை தாக்கவில்லை என்றும் கூறினார். அதற்கு அங்கிருந்த ஒருவர், அந்த பெண்ணை தாக்கியதை நான் பார்த்தேன் என கூறியதால் அங்கிருந்தவர்கள் போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்தனர்.

போலீஸ்காரரால் பொதுமக்களின் தாக்குதலில் இருந்து மீள முடியவில்லை. தொடர்ந்து அவரது மழைகோட்டை கழற்றி சீருடையை காட்டும்படி கூறி அவரை கீழே தள்ளி, பலரும் அவரை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

சரமாரியாக தாக்குதல்
ஒரு கட்டத்தில் அவர், மழை கோட்டால் முகத்தை மூடிக்கொண்டார். ஆனாலும் விடாமல் போலீஸ்காரரின் சட்டையை பிடித்துக்கொண்டு அவரை காலால் எட்டி உதைத்தும், காலணி மற்றும் கைகளாலும் சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வாயில் ரத்தம் வழிந்தது.

ஆனாலும் அதுவரையிலும் அந்த பகுதியில் ரோந்து போலீசார் யாரும் அங்கு வரவில்லை. சிறிது நேரம் கழித்த பின்னர்தான் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் இருந்து போலீஸ்காரரை மீட்டனர். பொதுமக்கள் தாக்கியதில் ரத்தம் சொட்ட, சொட்ட இருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அதன்பிறகு அவரை வடபழனி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அந்த போலீஸ்காரர் பெயர் ராஜு (வயது 40) என்பதும், சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து குடிபோதையில் அரும்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும்போது இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது
இதையடுத்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீஸ்காரர் ராஜு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், சீருடையில் குடிபோதையில் சென்றதால் அதற்கும் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதேபோல் பொதுமக்கள் தாக்கியதால் காயம் அடைந்த போலீஸ்காரர் ராஜுவிடம் புகார் பெற்று, அதன்மீது சீருடையில் இருந்த போலீசை தாக்கியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தாக்கியவர்கள் யார்?
குடிபோதையில் சீருடையில் இருக்கும் போலீஸ்காரரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கப்படும் காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சிகளை கொண்டே போலீஸ்காரரை தாக்கியவர்கள் யார், யார்? என்பது குறித்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவான்மியூரில் குடிபோதையில் தனது நண்பருடன் காரில் வந்த பெண் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ்காரர் களை காலால் எட்டி உதைத்து தாக்கிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குள் சீருடையில் குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீஸ்காரரை பெண்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்