நீர்வரத்து கால்வாய் தூர்வாரப்படாததால் வறண்டு கிடக்கும் அகரம்சேரி ஏரி; கால்வாயை தூர்வாரி பாலாற்றில் இருந்து தண்ணீரை திருப்பி விட கோரிக்கை
பாலாற்றில் இருந்து அகரம்சேரி ஏரிக்கு தண்ணீர் திருப்ப நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூர்வாரப்படாத கால்வாய்
வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மோர்தானா அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மற்றும் கிளை ஆறுகளில் வரும் தண்ணீர் பாலாற்றில் கலந்து வெள்ளம் ஓடுகிறது. பாலாற்றில் ஓடும் வெள்ளத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏரி கால்வாய்களில் திருப்பி ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்கின்றனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.
அகரம் சேரியில் சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு, பாலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவர மாதனூரை அடுத்த வடகாத்திப்பட்டி பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் சிறிது தூரம் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளதால் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்தக் கால்வாயில் தண்ணீர் திருப்பி விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஏரிக்கு தண்ணீர் திருப்ப வேண்டும்
10 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ஏரி கால்வாயில் தண்ணீர் வந்தால் அந்தப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயரும். அகரம்சேரி ஏரி நிரம்பி சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஏரி நிரம்பாமல் உள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து அகரம் சேரியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், “அகரம்சேரி ஏரிக்கு பாலாற்று தண்ணீரை தவிர வேறு எந்த வகையிலும் தண்ணீர் வரத்து கிடையாது. அனைத்து பகுதிகளிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை தூர்வாரி அந்தந்த கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி வரும் நிலையில், அகரம்சேரி ஏரிக்கு மட்டும் தண்ணீர் திருப்புவதற்கு முயற்சி எடுக்காதது என்ன காரணம் என்று தெரியவில்லை. இனியாவது பாலாற்றில் இருந்து அகரம்சேரி ஏரிக்கு தண்ணீர் திருப்புவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.