காலபைரவர் ஜெயந்தி விழா: கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்; கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தல்

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தட்சணகாசி காலபைரவர் கோவிலில் காலபைரவர் ஜெயந்தி விழா மற்றும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Update: 2020-12-07 04:08 GMT
இந்த விழாவையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில் காலபைரவர் ஜெயந்தி விழா நாளை நடைபெற உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. கொரோனா தொற்று பரவல்தடுப்பு காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அதிகபட்சமாக 200 நபர்களுக்கு மேல் கோவில் வளாகத்தில் கூட அனுமதியில்லை. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும். பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும். விழாநாளில் வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் வருகைக்கு அனுமதியில்லை. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் பிரகாஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, உதவி கலெக்டர் தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளி நாதன், மற்றும் தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்