திருப்பூரில், கடைகளில் சோதனை: காலாவதியான உணவுப்பொருட்கள் அழிப்பு

திருப்பூரில் கடைகளில் சோதனை நடத்தி காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப்பொருட்களை, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

Update: 2020-12-07 03:12 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கவேல், கேசவராஜ் கொண்ட குழுவினர் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பி.என்.ரோடு, கொங்குமெயின் ரோடு, புதிய பஸ் நிலையம், எஸ்.வி.காலனி பகுதிகளில் உள்ள பேக்கரிகள், மளிகை கடைகள், இறைச்சிக்கடை, பெட்டிக்கடை, மொத்த விற்பனை கடை, ஓட்டல்களில் சோதனை நடத்தினார்கள். மொத்தம் 41 கடைகளில் சோதனை நடந்தது.

கலப்பட டீ தூள்

இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 3 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் பைகள், குவளைகள் வைத்திருந்த இரண்டு கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த உணவுப்பொருட்கள் 16 கிலோ, காலாவதியான குளிர்பானங்கள் 9 லிட்டர் ஆகியவை கைப்பற்றி அழிக்கப்பட்டது.

கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்.நகர் பகுதியில் உள்ள ஒரு மொத்த விற்பனை கடையில் டீ தூளுடன் கலந்து விற்பனை செய்வதற்காக சாயம் கலந்த டீ தூள் வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. அந்த கலப்பட டீ தூளில் உணவு மாதிரி ஆய்வுக்கு எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது குற்ற வழக்கு தொடரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்