குமரியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது அடையாமடை பகுதியில் 59 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் நாகர்கோவிலில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2020-12-07 03:00 GMT
நாகர்கோவில்,

‘புரெவி‘ புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாரல் மழை மட்டுமே பெய்தது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் ஒரே புழுக்கமாகவும் இருந்தது. பின்னர் மதியம் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளிலும் மழை காணப்பட்டது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 1.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரலாக தொடங்கிய மழை சில நிமிடங்களில் பலத்த மழையாக கொட்டியது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்தது.

தண்ணீர் வரத்து

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

சிற்றார்-2 அணை பகுதியில் 8, சிற்றார் 1-6, கன்னிமார்-1.2, பேச்சிப்பாறை-3.2, பெருஞ்சாணி-1, புத்தன்அணை-1.2, ஆரல்வாய்மொழி-1.4 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அடையாமடை பகுதியில் 59 மி.மீ. பதிவாகி இருந்தது. மேலும் பூதப்பாண்டி-2.4, நாகர்கோவில்-12.2, பேச்சிப்பாறை-5.4 மி.மீ. மழை பெய்திருந்தது. மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 521 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு 305 கனஅடியும் தண்ணீர் வந்தது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 265 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 250 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 20 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.

மேலும் செய்திகள்