கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

Update: 2020-12-07 02:09 GMT
கடலூர்,

கடலூர் அருகே கீழ்பூவாணிக்குப்பத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேற்று அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி ஆகியோர் பார்வையிட்டு, அவர்களிடம் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக கிடைக்கிறதா? என்று கேட்டறிந்தனர்.

தொடர்ந்து ஆலப்பாக்கத்தில் கடலூர்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்வையிட்டு, தண்ணீர் சாலை வழியாக வராமல் மாற்றுவழியில் செல்வதற்கு வழிவகைகளை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து குறிஞ்சிப்பாடி, சிறுபாலையூர் ஊராட்சியில் கனமழை காரணமாக அப்பகுதி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டு, உணவினையும் சாப்பிட்டு பார்த்து தரத்தினை ஆய்வு செய்தனர்.

அதன்பிறகு பெருமாள் ஏரி, குண்டியமல்லூர் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களையும் பார்வையிட்டனர். அப்போது அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியதாவது:-

அனைவருக்கும் நிவாரணம்

கடலூர் மாவட்டத்தில் புரெவி புயலின் காரணமாக தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் நிரம்பி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாய நிலங்களில் பயிர்ச்சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. விவசாய நிலங்களில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றிய பிறகு சேத விவரங்கள் குறித்து மொத்தமாக தெரிய வரும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்-அமைச்சர் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உணவு

தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நோய் தொற்று பரவாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தண்ணீர் தேங்கியுள்ள பகுதி மற்றும் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பு மையங்களில் இயல்புநிலை திரும்பும்வரை தங்கியிருக்கலாம். முகாம்களில் இருப்பவர்களுக்கு 3 வேளையும் தரமான உணவு வழங்கப்படும்.

பெருமாள் ஏரியில் இருந்து 6,257 கன அடி தண்ணீர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை அளவை பொறுத்து படிப்படியாக வெளியேற்றும் தண்ணீரின் அளவு குறைக்கப்படும். பரவனாற்றில் வரும் தண்ணீர் கடல் உள் வாங்காததால் நிலப்பகுதியில் அதிகமாக தேங்கி பாதிப்புகள் ஏற்படுகின்றன. அருவாமூக்கு திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது இப்பாதிப்புகள் தவிர்க்கப்படும்.

அருவாமூக்கு திட்டம்

அருவாமூக்கு திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.54½ கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.60 கோடி நிதி தேவைப்படும் என அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் உத்தரவின்படி தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அருவாமூக்கு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், தாசில்தார் பலராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்