தொடர் மழையால் கடல் போல் மாறிய ஊசுடு ஏரியில் படகு சவாரி தொடங்கியது பொதுமக்கள் உற்சாகம்
தொடர் மழையால் ஊசுடு ஏரி நிரம்பி கடல்போல் மாறியதையொட்டி அங்கு படகு சவாரி தொடங்கியது. குழந்தைகளுடன் வலம் வந்து ஏரியின் அழகை பொதுமக்கள் உற்சாகமாக ரசித்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரிக்கு மேற்கே 12 கி.மீ. தூரத்தில் ஊசுடு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் 900 ஏக்கர் தமிழகத்துக்கும், 150 ஏக்கர் புதுச்சேரிக்கும் சொந்தமானது. இங்கு சுத்துக்கேணி கால்வாய் மூலமாக செஞ்சியாற்றில் இருந்து பெருமளவில் தண்ணீர் வருகிறது.
ஆண்டுதோறும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வந்து செல்கின்றன. எனவே இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்தது. கடந்த 4 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் ஊடுசு ஏரி முழுவதுமாக நிரம்பாமல் இருந்து வந்தது.
கடந்த சில நாட்களாக நிவர், புரெவி புயலால் பெய்த தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் வடிகால் வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தநிலையில் வீடூர் அணையில் திறக்கப்பட்ட உபரிநீர் ஊசுடு ஏரிக்கு கூடுதலாக வந்ததால் வறண்டு கிடந்த இந்த ஏரி தற்போது நிரம்பியுள்ளது.
புதுச்சேரியில் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் ஊசுடு ஏரியின் உயரம் 11.51 அடி ஆகும். தற்போது நீர்மட்டம் 10.5 அடியாக உள்ளது கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் வெளியே வரமுடியாமல் வீடுகளில் பொதுமக்கள் முடங்கி கிடந்தனர். நேற்று காலை லேசாக வெயில் முகம் காட்டியதையடுத்து புதுவையில் இருந்து குடும்பம் குடும்பமாக ஊசுடு ஏரிக்கு வந்தனர். நீண்ட காலமாக நிரம்பாமல் கிடந்த ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிப்பதை பார்த்து மெய்சிலிர்த்தனர்.
அந்த வழியாக கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் வாகனங்களை நிறுத்தி விட்டு ஊசுடு ஏரியின் அழகை கண்டு களித்தனர். சிலர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கொரோனா காரணமாக படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஊசுடு ஏரி தற்போது நிரம்பி இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் மீண்டும் படகு சவாரி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.
சிறிய, பெரிய படகுகள், பெடல் படகுகள் ஏரியில் விடப்பட்டுள்ளன. 20 நிமிட சவாரிக்கு தலா ரூ.100, 40 நிமிட சவாரிக்கு ரூ.180, பெடல் படகில் 4 பேர் சவாரி செய்ய 30 நிமிடத்திற்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் படகு சவாரிக்கு பொதுமக்களை அனுமதித்து வருகிறார்கள்.
நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் ஊசுடு ஏரிக்கு சென்று பார்வையிட்டனர். நீர்வரத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ஏரி முழுவதுமாக நிரம்பி உபரிநீரை வெளியேற்றினால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை நாராயணசாமி கேட்டுக் கொண்டார். அதன்பின் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.