இதேநிலை தொடர்ந்தால் விவசாயிகள் போராட்டம் டெல்லியோடு முடியாது - மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை
இதேநிலை தொடர்ந்தால், விவசாயிகளின் போராட்டம் டெல்லி யோடு முடியாது என மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மும்பை,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில் நாளை (8-ந் தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இந்தநிலையில் மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தை தீவிரமாக எடுத்து கொண்டு அந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தை தீவிரமாக எடுத்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை. அரசுக்கு ஞானம் பிறக்கும் என நம்புகிறேன். அரசு விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதேநிலை தொடர்ந்தால் போராட்டம் டெல்லியோடு முடியாது. நாட்டின் மூலை, முடுக்குகளில் இருந்தும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்”. இவ்வாறு அவர் கூறினார்.