சிக்பள்ளாப்பூர் அருகே நந்தி மலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மறந்த சுற்றுலா பயணிகள் - கொரோனா பரவும் அபாயம்
சிக்பள்ளாப்பூர் அருகே உள்ள நந்தி மலையில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது சமூக இடைவெளியை சுற்றுலா பயணிகள் கடைப்பிடிக்க மறந்ததால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் அருகே உள்ளது நந்திமலை. பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான இங்கு வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக பெங்களூருவில் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மனஅமைதிக்காக நந்திமலைக்கு படையெடுத்து செல்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நந்திமலைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டு உள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் நந்திமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே நந்திமலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்களில் நந்திமலைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்றனர். ஆனால் நந்திமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் யாரும் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் நந்திமலையில் சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்தது.
இதுதொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளால் தங்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக நந்திமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.