‘பந்த்’ எதிரொலி: ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பஸ்-லாரிகள் நிறுத்தம்
‘பந்த்’ எதிரொலியால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பஸ் மற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டது.
சத்தியமங்கலம்,
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மராட்டியர்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. ஆனால் கர்நாடகாவிற்கு நிதி ஒதுக்கவில்லை என கர்நாடகாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் இந்த செயலை கண்டித்து 5-ந் தேதி ஒருநாள் ‘பந்த்’ அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று கர்நாடகா மாநிலத்தில் ‘பந்த்’ நடந்தது. இதையொட்டி அங்கு கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பாதுகாப்பு கருதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ்நகர், மைசூர், பெங்களூர் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டது.
சத்தியமங்கலத்தில் இருந்து தலைமலை வழியாக தாளவாடிக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கர்நாடகா செல்ல வேண்டிய பயணிகள் சத்தியமங்கலத்திலேயே இறங்கிவிடப்பட்டனர். இதனால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.
இதேபோல் கர்நாடகாவில் இருந்து வந்த கர்நாடகா அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் பஸ் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருள்களான பால், மருந்து உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிச்சென்ற வேன்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. கர்நாடகா செல்ல வேண்டிய லாரிகள் அனைத்தும் பண்ணாரி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு லாரிகள் நீண்ட வரிசையில் நின்றது.