சேலம் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தம்; 17 இடங்களில் சாலை மறியல் - 1,520 பேர் கைது
சேலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் 17 இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதில் 1,520 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கந்தாஸ்ரமம் அருகே உள்ள எஸ்.ஆர்.பி. கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதனிடையே, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தி.மு.க.வினர் வாகனங்களில் திரண்டு வந்தனர். ஆனால், அவர்களை அந்தந்த பகுதிகளில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர், தலைவாசல், சங்ககிரி, ஓமலூர், வாழப்பாடி உள்பட 17 இடங்களில் போலீசாரை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக, சேலத்தில் தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், தெடாவூர், வீரகனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அந்த கட்சியினர் கார் மற்றும் வேன்களில் ஆத்தூர் புறவழிச்சாலை மற்றும் ஆத்தூர் நகர் வழியாக சேலம் நோக்கி வந்தனர். ஆத்தூர் புறவழிச்சாலை சந்தனகிரி, நரசிங்கபுரத்தில் ராசிபுரம் பிரிவு ரோடு, செல்லியம்பாளையம் ஆகிய 3 இடங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் தி.மு.க.வினர் வந்த வாகனங்களை சேலத்திற்கு செல்ல அனுமதி இல்லை என்று தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆவேசமடைந்த தி.மு.க.வினர் இந்த 3 இடங்களிலும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலைகளில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர், முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் தலைவாசல் ஒன்றியத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வாகனங்களில் புறப்பட்டனர். அவர்களை தலைவாசல் போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து, தி.மு.க.வினர் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசலை அடுத்து மும்முடி பிரிவு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை 8½ மணிக்கு தொடங்கிய சாலைமறியல் மதியம் 12 மணிக்கு முடிவடைந்தது. இந்த மறியலின் போது, தி.மு.க.வினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
சாலை மறியல் செய்த கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் லட்சுமணன், சித்தேரி கிளைச்செயலாளர் கண்ணுசாமி, வேப்பநத்தம் ராஜகோபால், இலுப்பநத்தம் சின்னப்பையன், நாவக்குறிச்சி பாலு உள்பட 200 பேர் மீது தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைவாசல் வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றபோது தலைவாசலுக்கு மதியம் 1.15 மணியளவில் வந்தார். அப்போது அவர் சில நிமிடம் நின்று காரில் இருந்தபடியே தி.மு.க. நிர்வாகிகளிடம் சால்வை பெற்றுக்கொண்டார்.
சேலத்தில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள கொங்கணாபுரம் ஒன்றிய, பேரூர் தி.மு.க. சார்பில் 220 பேர் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையில் புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து கொங்கணாபுரம் ரவுண்டானா அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கொங்கணாபுரம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
இதேபோல் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து ஒன்றிய செயலாளர் நல்லதம்பி தலைமையில் தி.மு.க.வினர் 221 பேரும், எடப்பாடி நகரத்தின் சார்பில் கட்சியின் செயலாளர் பாஷா தலைமையில் 273 பேரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள புறப்பட்டனர். அவர்களை எடப்பாடி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து எடப்பாடி பஸ்நிலையம் எதிரில் தி.மு.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி உள்ளிட்ட பகுதியில் இருந்து வாகனங்களில் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தி.மு.க.வினர் வந்தனர். மேச்சேரி பிரிவு ரோடு ஓமலூர் பஸ்நிலையம், ஆர்.சி.செட்டிபட்டி பிரிவு ரோடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செல்ல அனுமதிக்காததால் போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஓமலூர் பைபாஸ் ரோடு, ஓமலூர்-தர்மபுரி ரோடு, மேச்சேரி ரோடு ஆகிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, கட்சியின் காடையாம்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் அறிவழகன், மேச்சேரி ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள், காடையாம்பட்டி நகர செயலாளர் திருநாவுக்கரசு, ஓமலூர் நகர பொறுப்பாளர் ரவிசந்திரன் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அயோத்தியாப்பட்டணம் அருகே காரிப்பட்டி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்தனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி செல்ல அனுமதி மறுத்ததால் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. இதன்காரணமாக அயோத்தியாப்பட்டணம் பகுதியில் பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதே போல் தாரமங்கலம் வழியாக சேலம் ஆர்ப்பாட்டத்திற்கு கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மிதுன் சக்ரவர்த்தி தலைமையில் கட்சி நிர்வாகிகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தாரமங்கலம் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த நிர்வாகிகள் அங்கேயே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 210 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் நடந்த சாலைமறியலில் பங்கேற்ற தி.மு.க.வினர் 1,520 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.