குடியாத்தம் அருகே, விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை - கைத்துப்பாக்கி, 31 தோட்டாக்களையும் திருடி சென்றனர்
குடியாத்தம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை, ரூ.3 லட்சம், கைத்துப்பாக்கி, 31 தோட்டாக்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோவிந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 68). சந்திரனின் வீடு மெயின் ரோட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் நிலத்தில் உள்ளது. இவரது மகன், மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது, மகன் லண்டனிலும், ஒரு மகள் சென்னங்குப்பம் கிராமத்திலும் மற்றொரு மகள் சென்னையிலும் வசித்து வருகின்றனர்.
சந்திரன் விவசாயம் செய்து வருகிறார். இவரும் இவரது மனைவி மட்டுமே வீட்டில் உள்ளனர். நிலத்தில் வீடு கட்டி உள்ளதால் தனது பாதுகாப்பிற்காக 2017-ம் ஆண்டு உரிமத்துடன் கைத்துப்பாக்கி வாங்கியுள்ளார். மேலும் வீட்டை சுற்றி 8 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இருந்தார்.
இவரது மூத்த மகள் சுபாஷினி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்து வருகிறார், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பதற்கான சுபாஷினியுடன் நேற்று முன்தினம் சந்திரனும், ரேவதியும் சிதம்பரம் சென்றனர். அங்கு பலத்த மழை பெய்ததால் இவர்கள் சென்ற கார் பழுதானது. இதனால் மாலையில் வீடு திரும்ப முடியவில்லை.
நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை செல்போனில் கேமராக்கள் மூலமாக கண்காணித்து வந்துள்ளார். நேற்று காலை 5 மணிக்கு செல்போன் மூலம் கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது அதனுடைய சிக்னல்கள் வரவில்லை. ஒரு வேளை மழைக்காக பழுதாகி இருக்கலாம் என நினைத்து விட்டார்.
நேற்று மதியம் சிதம்பரத்தில் இருந்து ஊருக்கு திரும்பி தனது மகள் உள்ள சென்னங்குப்பம் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை 3.30 அளவில் கோவிந்தபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் திறந்து அலங்கோலமாக இருந்துள்ளது, பீரோவில் வைத்திருந்த 32 பவுன் நகை, ரூ.3 லட்சம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கைத்துப்பாக்கி அதனுடன் இருந்த வைக்கப்பட்டிருந்த 31 தோட்டாக்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. மேலும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவு செய்யும் கருவியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் நிருபர்களிடம் கூறுகையில், இந்த திருட்டு சம்பவம் குறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் ஒரு தனிப்படையும், தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் திருட்டு நடைபெற்ற வீட்டிற்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
சந்திரன் தன் வீட்டை சுற்றி உள்ள நிலத்தில் 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மர்ம கும்பல் அடிக்கடி இரவு நேரங்களில் வந்து சந்தன மரங்களை வெட்டி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துப்பாக்கியுடன் 31 தோட்டாக்கள் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.