விருதுநகரில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுநகரில் தி.மு.க.வினர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாய சட்ட திருத்தங்களை மத்திய அரசு ரத்து செய்ய கோரியும் மாவட்ட தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க. தலைமை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
அதனடிப்படையில் விருதுநகரில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., விருதுநகர் எம்.எல்.ஏ. ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி செயலாளர் ராஜகுரு, இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும், நகர
ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கருப்புக்கொடியுடன் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தூண்டுகிறது
ஆணவப்போக்குடன் உள்ள மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான மூன்று திருத்த சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அ.தி.மு.க. அரசும் இதனை ஆதரிக்கின்றது. விவசாயிகள் விவசாயத்தில் லாபம் இல்லாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் அவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் இந்த திருத்தச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாயிகள் மீது அக்கறை உள்ள அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
தொடர்ந்து டெல்லியில் வெயிலிலும் மழையிலும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நமது குரலும் ஒலிக்கவேண்டும் என்பதற்காக
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தினார்.
ரத்து செய்ய வேண்டும்
அதனடிப்படையில் விருதுநகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்து விவசாய சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் மீது அக்கறை உள்ள நம்மை போன்றவர்களின் கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.