மின்தடையை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
புதுவையில் மின்தடையை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
புதுச்சேரி,
புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தட்டாஞ்சாவடி கொக்குபார்க் அருகே பொய்யாகுளம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இது குறித்து மின்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் மின்துறை ஊழியர்கள் மத்திய அரசின் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மின்பழுது சரி செய்யப்படவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நள்ளிரவில் கொக்குபார்க் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, மின்பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி வரை பொய்யாகுளம் பகுதியில் மின்தடை சரிசெய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, வெங்கடேசன், தி.மு.க. அமைப்பாளர் (தெற்கு) எஸ்.பி.சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதை அறிந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் மின்வினியோகம் வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதுபற்றி போலீசார் மின்துறைக்கு தகவல் தெரிவித்து மின்தடையை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த மறியல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதற்கிடையே அந்த வழியாக வந்த 2 ஆம்புலன்சுக்கு மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வழிவிட்டனர். பின்னர் மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொய்யாகுளம் பகுதியில் ஏற்பட்ட மின்பழுதை சரி செய்தனர். அதையடுத்து அந்த பகுதிக்கு மின்சாரம் வந்தது. இதன்பின்னர் பொதுமக்கள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இந்த போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை போலீசார் சரிசெய்தனர்.