தென்காசி, சிவகிரியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்காசி, சிவகிரியில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-06 00:42 GMT
தென்காசியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தென்காசியில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். மேலும் பலர் தி.மு.க. மற்றும் கருப்பு கொடிகளை கையில் ஏந்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

சிவகிரி
இதேபோல் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ.துரை தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் ரஜப் பாத்திமா, தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் முத்தையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்