நெல்லை, தென்காசியில் விடிய, விடிய மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தூத்துக்குடியில் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
நெல்லை, தென்காசியில் விடிய, விடிய பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
கனமழை
வங்ககடலில் உருவான புரெவி புயல் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் இந்த மாவட்டங்களில் விடிய, விடிய மழை பெய்தது. இரவில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.
கருப்பாநதி அணை பகுதியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சேர்வலாறு மலைப்பகுதியில் 60 மில்லி மீட்டர் மழை பதிவானது.
குற்றாலத்தில் வெள்ளம்
இந்த நிலையில் நெல்லை, தென்காசியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சுரண்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
இதன் காரணமாக நெல்லை மாநகரில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. மனக்காவலன்பிள்ளைநகர், டார்லிங் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் குடியிருப்புகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடந்தது. பழையபேட்டை பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்றது. குற்றாலத்தில் பெய்த மழையால் மெயின் அருவியில் நேற்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மாலையில் நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து அங்கு மழை பெய்தது.
கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
சாலைகளில் தேங்கி நின்ற தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் உறிஞ்சி அகற்றினார்கள். பாளையங்கோட்டையில் பெய்த மழைக்கு லூர்துநாதன் சிலை அருகே இருந்த பழமையான ஒரு வேப்பமரம் திடீரென சாலையில் சரிந்து விழுந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அந்த மரத்தை அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகில் உள்ள கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1074 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால்
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 122 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 1 அடி உயர்ந்து 123.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து 385 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 3 அடி உயர்ந்து 132.68 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 97 அடியாக உள்ளது. அணைக்கு 602 கன அடி வந்து கொண்டு இருக்கிறது. கடனாநதி
நீர்மட்டம் 79 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் 73.25 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 68.24 அடியாகவும், அடவிநயினார் நீர்மட்டம் 90.50 அடியாகவும், நம்பியாறு 10.62 அடியாகவும், கொடுமுடியாறு 34.75
அடியாகவும் உள்ளன. குண்டாறு அணை கடந்த 10 நாட்களாக நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த அணைகளுக்கு நீர்வரத்து வந்து கொண்டே இருக்கிறது.
மேலும், புயல் முன்எச்சரிக்கை காரணமாக அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தாழ்வான பகுதியை சேர்ந்த மக்கள் 3-வது நாளாக நேற்றும் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று தாமிரபரணி ஆற்றில் யாரையும் குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை.
500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இரவில் பலத்த மழையாக கொட்டியது. நேற்று காலையில் மழை இல்லாமல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் தூத்துக்குடி மாநகரில் அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சுமார் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வீடுகளில் உள்ளவர்கள் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகரில் மோட்டார்கள் மற்றும் 8 டேங்கர் லாரிகள் மூலமும் மழைநீர் உறிஞ்சி அகற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 108 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மழை அளவு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கருப்பாநதி-70, சேர்வலாறு-60, மூலைக்கரைப்பட்டி-60, மணிமுத்தாறு-55, பாளையங்கோட்டை-53, பாபநாசம்-53, தென்காசி-49.4, சங்கரன்கோவில்-48, செங்கோட்டை-47, சிவகிரி-40, ஆலங்குளம்-40, குண்டாறு-39,
களக்காடு-34, அம்பை-33, நெல்லை-32, அடவிநயினார்-31, ராமநதி-30, நாங்குநேரி-23, ராதாபுரம்-22, கடனாநதி-22, சேரன்மாதேவி-20, நம்பியாறு-6, கொடுமுடியாறு-5, காயல்பட்டினம்-108, திருச்செந்தூர்-69, குலசேகரன்பட்டினம்-55, விளாத்திகுளம்-33, காடல்குடி-14, வைப்பாறு-63, சூரங்குடி-33, கோவில்பட்டி-35, கயத்தாறு-47, கழுகுமலை-14, கடம்பூர்-62, ஓட்டப்பிடாரம்-61, மணியாச்சி-48.4, வேடநத்தம்-35, கீழஅரசடி-21.7, எட்டயபுரம்-37, சாத்தான்குளம்-44, ஸ்ரீவைகுண்டம் -5.2, தூத்துக்குடி-89.3.